மோடி பேசுவதோடு சரி செயல்பாட்டில் ஒன்றுமில்லை

காரைக்கால், நவ. 14: இந்திய நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளிய ஜனநாயக விரோத போக்கினை கடைபிடித்து வரும் பா.ஜ.க வையும், மத்திய மோடி அரசையும்  கண்டித்து  காங்கிரஸ் கட்சி சார்பில் காரைக்காலில்  பேருந்து நிலையம்  அருகில்  நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், நமச்சிவாயம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னாள் அமைச்சரும், முன்னாள்  புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவருமான ஏ.வி சுப்ரமணியம்  உட்பட  300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

 கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது ராகுல் காந்தியின் ஆலோசனையோடு 2004ம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்தில் வளர்ச்சியை நாம் கண்டோம். உலகத்திலேயே சீனவுக்கு அடுத்த வளர்ச்சிப் பாதையில் இந்திய நாடு சென்று கொண்டிருந்தது. சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் என்று சொன்னால் இந்திய நாட்டின் வளர்ச்சி 9%. அந்த சமயத்தில்தான் பல தொழிற்சாலைகள் நம் நாட்டில் கொண்டு வரப்பட்டன. வெளிநாட்டு மூலதனம் இங்கு வந்தது. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது,  வேலைவாய்ப்பு உருவாகியது, கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்றது.  மனை எல்லாம் சிறப்பான முறையில் விற்கப்பட்டன, நெடுஞ்சாலைகள் எல்லாம் போடப்பட்டன.

 கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வருடத்துக்கு 60 லட்சம் கோடி ரூபாயை காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு திட்டம், அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு திட்டம் போன்றவற்றால், தொழிற்சாலையில் வளர்ச்சி, விவசாயத்தில் வளர்ச்சி போன்றவற்றால் 9 சதவீத வளர்ச்சியை கண்டோம். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டு இருந்த நிலையில் துரதிர்ஸ்டவசமாக 2014 பாஜக ஆட்சி வந்தது. பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய்  போடுவோம் என்று சொன்னார். அதுமட்டுமல்ல இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஒவ்வொரு ஆண்டும் கொடுப்போம்  என்று கூறினார். வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து வளர்ச்சியைக் காண்போம் என்று கூறினார். குறிப்பாக பிரதமர் சொன்ன எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 168 வாக்குறுதி கொடுத்தார். அதில், ஒரு வாக்குறுதியை கூட பிரதமர் இன்றுவரை நிறைவேற்றவில்லை.

 மோடி பேசுவதோடு சரி செயல்பாட்டிலேயே அவருடைய சாதனை ஒன்றுமில்லை என்பதை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும். 5 ஆண்டுகாலம் மோடியின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்டது இந்தியாவின் பொருளாதாரம் என்ன?  5%

ஒரு நாட்டின் வளர்ச்சியே பொருளாதாரத்தை வைத்து தான் சொல்ல முடியும். நான் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் மிகப்பெரிய வல்லரசான சீனா நாட்டின் அதிபர் சென்னை மகாபலிபுரம் வந்தார். சீன பிரதமர் வந்தாரு ஒப்பந்த எல்லாம் போட்டாங்க, மகிழ்ச்சி ஆனா இங்கே இருந்து போனவுடன் மூன்று நாட்களில் சென்ற சீன பிரதமர்  பாகிஸ்தானுக்கு ஆதரவாக  அறிக்கை கொடுக்கிறார். அமெரிக்கா நமக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பிரதமரின் வெளியுறவுக்கொள்கை தோல்வி அடைந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>