சுற்றுலா பயணிகளை கவர அறிமுகம் புதுவை போக்குவரத்து போலீசாருக்கு கருநீல, வெள்ளை நிற டி-சர்ட் சீருடை

புதுச்சேரி,  நவ. 14: புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வார   விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அரசு விடுமுனை தினத்தில் பணியிலிருக்கும்   போக்குவரத்து போலீசார் கருநீல, வெள்ளை நிற டி-சர்ட் சீருடையை அணிய  உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம்   அமல்படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இந்த மாதம் முதல் இந்த சட்டத்தை   போக்குவரத்து காவலர்கள் அமல்படுத்தி அபராத தொகை வசூலித்து வருகின்றனர்.

  இதனிடையே  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும்  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போக்குவரத்து போலீசாருக்கு புதிய  சீருடைகளை அந்தந்த  மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

மணிப்பூர்,  கோவா உள்ளிட்ட  மாநிலங்களில் ஏற்கனவே புதிய சீருடை போலீசாருக்கு  வழங்கப்பட்ட நிலையில்  புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும்  வகையில் இங்கும் நவீன சீருடை  வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

 இந்நிலையில் கருநீலம், வெள்ளை  நிறத்துடன் கூடிய டி-சர்ட்   போக்குவரத்து போலீசாருக்கு  சீருடையாக நேற்று வழங்கப்பட்டுள்ளது. இந்த  சீருடைகளை போக்குவரத்து  போலீசாருக்கு முதல்வர் நாராயணசாமி டிஜிபி  கருத்தரங்கு அறையில் வழங்கி புதிய  திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த  புதிய சீருடையை பணியில் இருக்கும்  இன்ஸ்பெக்டர் முதல் காவலர்கள் வரை  அனைவரும் வார விடுமுறை நாட்களான சனி,  ஞாயிறு மட்டுமின்றி அரசு விடுமுறை  நாட்களிலும் அணிய வேண்டுமென  உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தற்போது  முதல்கட்டமாக ஒவ்வொரு காவலருக்கும்  தலா 2 செட் புதிய சீருடை  வழங்கப்பட்டுள்ளது. இதில் தலைமை  செயலர் அஸ்வனி குமார்,  டிஜிபி பாலாஜி வஸ்தவா மற்றும் காவல்துறை  அதிகாரிகள், போக்குவரத்து  எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.  புதுச்சேரி போக்குவரத்து  போலீசார் ஏற்கனவே கடற்படை வீரர்களை போன்று  வெள்ளைநிற பேண்ட், சர்ட்டை  சீருடையாக அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>