பொறையார் ராஜீவ்புரத்தில் மரணக்குழியாக மாறிய வாய்க்கால் பாலம்

தரங்கம்பாடி, நவ. 14:  நாகை மாவட்டம், பொறையார் ராஜீவ்புரத்திலிருந்து கழுவன் திட்டுப் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் பாலம் உடைந்து பொதுமக்களுக்கு மரணபயத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் பொறையார் ராஜீவ்புரம் பக்கமுள்ள கழுவன்திட்டு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பொறையார், தரங்கம்பாடி பிரதான சாலைக்கு வர சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே ஒரு வடிகால் வாய்க்கால் உள்ளதால் அந்த வாய்க்காலில் மதகும், பாலமும் கட்டப்பட்டிருந்தது.கடந்த 6 மாதங்களுக்கு முன் மதகுகள் மற்றும் பாலம் உடைந்து பெரியபள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் வாய்க்கால் பாலத்தில் நடந்து மட்டுமே வர முடியும். இரவு நேரத்தில் விளக்கு ஒளியும் இல்லாததால் சைக்கிளில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

மேலும் கழுவன்திட்டு பகுதியில் திடீர் நோயால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றால் எந்த வாகனமும் உள்ளே வர முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அந்த பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் ஏழைகள்.உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவி சாய்க்காமல் இருப்பது அப்பகுதி மக்களை வேதனை அடைய செய்துள்ளது. இனியும் கால தாமதப்படுத்தாமல் அரசு இந்த பாலத்தை புதிதாக கட்டி சாலை வசதி செய்து தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: