மரப்பாலத்தில் புதிய பேருந்து நிறுத்தம்

புதுச்சேரி, நவ. 14:  புதுச்சேரியில் நாளுக்குநாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் சாலைகளில் நெரிசல் அதிகமாக உள்ளது. அந்தவகையில் புதுச்சேரி கடலூர் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. குறிப்பாக மரப்பாலம் சந்திப்பில் 5 சாலைகள் சந்திப்பதால் கூடுதல் நெரிசல் இருந்து வந்தது. அப்பகுதியில்பேருந்துகள் நிறுத்தும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன், மரப்பாலம் சந்திப்பில் பயணிகள் ஏறுவதற்கு மிகுந்த சிரமம் உள்ளதால், மின்துறைக்கு சொந்தமான இடத்தில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பேருந்து நிறுத்தம் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையேற்று கடந்த சில தினங்களாக அங்கு பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இது குறித்து அனந்தராமன் கூறியதாவது:மரப்பாலம் சந்திப்பில் கடலூர் செல்பவர்கள் மட்டுமின்றி காரைக்கால், சிதம்பரம் என நீண்டதூரம் செல்பவர்களும் பேருந்துகளில் ஏறுகின்றனர். ஆனால் இட வசதி இல்லாததால் பேருந்துகள் நிறுத்துவது இல்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். எனவே இது குறித்து கடந்த சட்டமன்றத்தில் வலியுறுத்தி முதல்வரிடம் பேருந்து நிறுத்தம் அமைக்கும்படி கேட்டுக் கொண்டேன். எனது கோரிக்கையை ஏற்று, தற்போது அங்கு பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>