ஜோலார்பேட்டையில் பரபரப்பு ரயில்வே பணிமனையில் திடீர் தீ

ஜோலார்பேட்டை, நவ.14: ஜோலார்பேட்டை ரயில்வே பணிமனையில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் தீயை நாட்றம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் விரைந்து அணைத்ததால் பேராபத்து தவிர்க்கப்பட்டது. ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள  ரயில்வே பணிமனையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ரயில்வே பணிமனையில் பழுதான கூட்ஸ் ரயில் பெட்டிகள் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வந்தது.அப்போது, ரயில் பெட்டிகளில் இருந்து பழுதான உதிரிபாகங்களை வெல்டிங் மூலம் அகற்றும்பணியில் ரயில்வே ஒப்பந்த ஊழியர் ஈடுபட்டார். அப்போது, அசிட்டிலின் காஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அங்கு பணியில் இருந்தவர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தீ விபத்து குறித்து தலைமை கண்காணிப்பாளர் ஜான்சன் நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையிலான வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.பின்னர், அந்த காஸ் சிலிண்டரை அங்குள்ள தண்ணீர் தொட்டியில்  அழுத்தி குளிர்வித்தனர். இதன் மூலம் பேராபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories: