சப்-கலெக்டர் பங்கேற்காததால் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்: கண்துடைப்பிற்காக நடத்துவதாக குற்றச்சாட்டு

திருப்பத்தூர், நவ.14: விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் சப்-கலெக்டர் பங்கேற்காததால் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். மேலும், கண்துடைப்பிற்காக நடத்துவதாக குற்றம் சாட்டினர். திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், காலை 10 மணிக்கு சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து 12 மணி வரை காத்திருந்தனர். பின்னர், வந்த சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணவேனி சப்-கலெக்டர் இல்லாததால் கூட்டத்தை தான் நடத்துவதாக தெரிவித்தார். ஆனால், விவசாயிகள் சப்-கலெக்டர் வந்தனாகர்க் பதவியேற்று முதல் கூட்டம் நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் அவர் இல்லை என்றால் நாங்கள் அளிக்கும் புகார் மற்றும் விவசாயிகளின் குறைகளை அரசிடம் யார் தெரிவிப்பார்கள் என்று கேட்டனர். கடந்த 2 ஆண்டுகள் சப்-கலெக்டராக இருந்த பிரியங்கா பங்கஜம் கூட்டத்தை நடத்தாமல், கடந்த ஆண்டு 2 முறை மட்டும் கூட்டம் நடத்தினார். எனவே, சப்-கலெக்டர் முன்னிலையில் தான் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.  பின்னர் அவர்கள் கூறியதாவது: தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை கண்துடைப்பிற்காக நடத்தி வருகின்றனர். மேலும், விவசாயிகளின் குறைகளை கேட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பதில்லை.  எங்களின் குறைகளை கேட்காததால் கலெக்டர் முதல் அடிமட்ட ஊழியர் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, நாங்கள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கிறோம். இனியாவது விவசாயிகளின் நலன் கருதி சப்-கலெக்டர் தலைமையில் விவசாயிகள் கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>