வெள்ளக்காடானது ரயில்வே சுரங்கப்பாலம் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

ஓமலூர், நவ.14: ஓமலூர் அருகே சுரங்கப்பாலம் வெள்ளக்காடானதால், 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஓமலூர் அருகே சாமிநாயக்கன்பட்டி கிராமத்தின் வழியாக, சேலம் -மேட்டூர் மார்க்கமாக செல்லும் ரயில்வே இருப்புப்பாதை உள்ளது. இந்த வழியாக மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் ரயில்கள் அடிக்கடி வந்து செல்கின்றன. கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு, சுரங்கப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது தரைப்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் சுரங்கப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால், அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாமிநாயக்கன்பட்டியை சுற்றிலும் 20க்கும் மேற்பட்டசிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து சேலம், ஓமலூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானல் இந்த சுரங்கப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.

தற்போது சுரங்கப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீரை வெளியேற்ற குழாய் மற்றும் மோட்டார் வைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: