வாழ்க்கை வரலாற்று நூலை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்

சேலம், நவ.14:  முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூலை, சேலத்தில் வரும் 17ம் தேதி நடைபெறும் விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இதுதொடர்பாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்ட திமுகவின் ஆணிவேராகத் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். தான் பிறந்த 1957ம் ஆண்டு முதல், இறுதி காலம் வரை, அடிமட்டத் தொண்டனாக இருந்து மாவட்ட செயலாளர் வரை பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியுள்ளார். அதேபோல பூலாவரி அக்ரஹார ஊராட்சித் தலைவர் முதல், அமைச்சர் வரை பல பொறுப்புகளை வகித்து பல்வேறு அரும்பணிகளை ஆற்றியுள்ளார். அதன் காரணமாகவே, அவர் மறைந்து விட்டாலும் இன்னமும் தொண்டர்கள் மற்றும் சேலம் மாவட்ட மக்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் வாழ்ந்த காலத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமான பேராசிரியர் உள்ளிட்ட தலைவர்களுடன் கொண்ட உறவுகள், குடும்ப வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள், பொது வாழ்வில் பெற்ற இனிமையான அனுபவங்கள், கடந்து வந்த கசப்பான சோதனைகள், கழகத்தின் ஆற்றல்மிகு தொண்டர்கள் மற்றும் சந்தித்த பலவிதமான மனிதர்களை பற்றி எழுதி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவற்றையெல்லாம் தொகுத்து ‘‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட உள்ளது. வரும் 17ம் தேதி காலை 9 மணிக்கு,  5 ரோட்டில் உள்ள ஸ்ரீரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு பேசுகிறார். இந்த விழாவில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வீரபாண்டியார் மீது பற்றும், பாசமும் கொண்ட பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: