சாயப்பட்டறை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காடையாம்பட்டி, நவ.14:  காடையாம்பட்டி அருகே விதி மீறி செயல்படும் சாயப்பட்டறைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு திரண்டு வந்து புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மோட்டூர் பகுதியில், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மோகனவேல் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி(41) ஆகியோர், தங்கள் குடும்பத்தினருடன் நேற்று தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு வந்தனர். குடிநீரில் சாயக்கழிவு கலந்து வருவதாக கூறி பாட்டிலில் பிடித்து கொண்டு வந்த தண்ணீரை காண்பித்து புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘குடிநீரில் சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து வருவது குறித்து  கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி செயலர் முருகனிடம் முறையிட்டதின்பேரில், சம்பந்தப்பட்ட  சாயப்பட்டறையில் விசாரணை நடத்தி எச்சரிக்கை விடுத்தார். இதனால், சாயப்பட்டறை உரிமையாளர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். எனவே, மிரட்டல் விடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விதி மீறி சட்டவிரோதமாக செயல்படும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுத்து, குடிநீரில் மாசு கலப்பதை கட்டுப்படுத்த வேண்டும்,’ என்றனர்.

Related Stories:

>