பணியாளர்கள் பற்றாக்குறை மின்சாரம் கணக்கீடு பணிகள் பாதிப்பு

கொடைக்கானல், நவ.14:  கொடைக்கானலில் மின் கணக்கீட்டாளர் பற்றாக்குறை நிலவுவதால் மின் கணக்கீடு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் மின்சார வாரியத்தில் 19 பணியாளர்கள் இருக்க வேண்டும். இதில் 12 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 7 பணியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதில் மின் கணக்கீட்டாளர் களும் அடங்குவர். மின் கணக்கீட்டாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் ஒவ்வொரு மாதமும் மின்சார இணைப்பு பெற்றுள்ள வீடுகளில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது, எத்தனை யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதற்குரிய கட்டணம் எவ்வளவு, எந்த தேதியில் கட்டவேண்டும் உள்ளிட்ட தகவல்களை பெற முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இது தவிர குறிப்பிட்ட காலத்தில் கணக்கீடு நடைபெறாத காரணத்தினால் எவ்வளவு தொகை கட்டவேண்டும் என்று தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மின்சார கட்டணம் கட்டுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

காரணம் மின் கணக்கீடு இல்லாமல் எப்படி பணம் செலுத்துவது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆன்லைனிலும் கட்டுவதற்கு முடியாத நிலை உள்ளது. நேரடியாக மின்சார வாரியத்திற்கு சென்று பணம் கட்டுவதற்கு பொதுமக்கள் சென்றால் அங்கு கணக்கீடு செய்யாமல் கம்ப்யூட்டரில் அந்த கணக்கு ஏறவில்லை என்று பணியாளர்கள் கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். அல்லது முந்தைய மாத கணக்கீட்டு அளவை எடுத்துக் கொண்டு அதே அளவிற்கு தொகைகளை கட்டுவதற்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.

இந்த இக்கட்டான நிலையை மாற்றுவதற்கு கொடைக்கானல் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள மின் கணக்கீட்டு பணியாளர்கள் உள்ளிட்ட காலி பணியிடத்தை மின்சார வாரியம் விரைவில் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி கொடைக்கானல் மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ கூறுகையில், பணியாளர்கள் பணியிடங்கள் 19 இருக்க வேண்டும். இதில் 12 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 7 பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது பற்றி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் இந்த காலிப்பணியிடங்களை நிரப்பி பொதுமக்களின் சிரமம் சீர் செய்யப்படும் என்றார்.

Related Stories:

>