×

ரேஷனுக்கு செல்ல 5 கி.மீ பயணம் சங்கடபுரமாக்கும் சமத்துவபுரம்

சின்னமனூர், நவ.14: அடிப்படை வசதி அறவே இல்லாத சின்னமனூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை தேனி மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் அருகே தேனி ஒன்றியத்தில் சீலையம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். திமுக அரசில் 2010-11ம் ஆண்டு சீலையம்பட்டி ஜங்கால்பட்டி சாலையில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. 100 வீடுகளைக் கொண்ட சமத்துவபுரத்தில் ரேஷன்கடை, விளையாட்டு மைதானம், மயானம், மேல்நிலைத்தொட்டி, உடற்பயிற்சி அரங்கம், ஆழ்குழாய் வசதி அமைக்கப்பட்டது. இந்நிலையில் 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு பொறுப்பேற்றது. பயனாளிகளை பல மாதங்கள் காக்க வைத்து குலுக்கல் முறையில் சமத்துவபுர வீடுகள் ஒதுக்கப்பட்டன. இங்கு 100 குடும்பங்கள் குடிவந்தும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவில்லை. முக்கியமாக முல்லைப் பெரியாற்று குடிநீர், ரேஷன்கடை, மினிபஸ் உள்ளிட்ட வசதிகளை 9 ஆண்டுகளாகியும் மாவட்ட நிர்வாகம் இதுவரை ஏற்படுத்தவில்லை. குடிநீர் கொண்டு வருவதற்காக குழாய்கள் பதித்து இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியும் காட்சி பொருளாக உள்ளது.

ரேஷன் கடை இருந்தும் அரிசி, பருப்பு, சீனி, மண்ணெண்ணெய், பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கொண்டு வந்து சமத்துவபுர மக்களுக்கு விநியோகம் செய்யப்படவே இல்லை. இதனால் சமத்துவபுர மக்கள் 3 கி.மீ நடந்து சென்று சீலையம்பட்டியில் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டு தலைச்சுமையாக சுமந்து வரும் அவலம் உள்ளது. சீலையம்பட்டியிலிருந்து சமத்துவபுரத்திற்கு மினி பஸ் விடாததால், 100 குடும்பத்தினரும், சீலையம்பட்டி நடந்து வர வேண்டிய கட்டாய நிலை உள்ளது. சமத்துவபுர மக்கள் யாருக்காவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அபாய நிலை ஏற்பட்டால் அதிக சிரமம் ஏற்படுகிறது. சமத்துவபுரத்தில் ஒதுக்கப்பட்ட மயானம் இதுவரை கட்டப்படவில்லை. இதனால் இறப்பு ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் வரவழைத்து 5 கி.மீ தூரம் கொண்டு சென்று இறுதிநிகழ்ச்சிகளை நடத்தும் இன்னலுக்கு சமத்துவபுர மக்கள் ஆளாகியுள்ளனர். இதுகுறித்து பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென சமத்துவபுர மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திமுக அரசு கொண்டு வந்த சமத்துவபுர திட்டத்தை பிடிக்காமல் அதிமுக அரசு அடிப்படை வசதிகளை 9 ஆண்டுகளாக நிறைவேற்றி தராமல் மக்களை சித்ரவதை செய்வதாக அங்கு குடியிருக்கும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து சமத்துவபுரத்தை சேர்ந்த செல்வி, மாரியம்மாள் ஆகியோர் கூறுகையில், சமத்துவபுரத்தில் குடியேறி 9 ஆண்டுகளாகியும் இதுவரை அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இங்கு குடியிருப்பவர்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள். குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகிறோம். முல்லைப் பெரியாற்று தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமத்துவபுரத்திற்காக ஒதுக்கப்பட்ட மயானம் எங்கு இருக்கிறது என தெரியாமல் தேடி வருகிறோம். வெளியூர் செல்லவும், ரேஷன் கடைக்கு போகவும் தினந்தோறும் 6 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், உடல் நலன் பாதிக்கப்பட்டோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தேனி மாவட்ட கலெக்டர் சமத்துவபுரத்தை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும்’’ என்று கூறினர்.

Tags : Rashan ,
× RELATED ஐடி to கைத்தறி நெசவு! சென்னிமலை இளைஞரின் இலட்சியப் பயணம்