×

செய்யாறில் பரபரப்பு சாலை அமைக்கும் பணி மெத்தனம் கண்டித்து காங்கிரசார் மறியல்: எம்பி பங்கேற்பு

செய்யாறு, நவ.14:  செய்யாறு அருகே சாலை அமைக்கும் பணி மெத்தனம் கண்டித்து எம்பி விஷ்ணுபிரசாத் தலைமையில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். செய்யாறு- காஞ்சிபுரம் சாலையில் புளியரம்பாக்கம் கிராமம் வரை நெடுஞ்சாலை துறை சார்பில், ₹3 கோடி மதிப்பில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சாலையை ஒட்டி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள கன்னியம் நகர் பரிதிபுரம் ஏரிக்கரையை உடைத்து, தற்காலிகமாக மண் சாலையை அமைத்து வாகனங்கள் சென்று வருகிறது.கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஏரிப்பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக சாலை சேறும், சகதியுமாக மாறி, வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் நடுவழியில் அடிக்கடி நிற்கும் நிலை உள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் தொடங்கிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது வரை 40 சதவீதம் பணிகளே  முடிந்துள்ளது. இப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்,  எம்பி, எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத் தலைமையில் தொண்டர்கள் நேற்று செய்யாறு அண்ணா சிலை எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, முதல்வரின் கட்டுபாட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை மிகவும் சீர்கெட்டுள்ளது. அவரது உறவினர் சாலை பணிகளை எடுத்தால் தாமதமாக செய்யலாம் என்று சட்டம் இருக்கிறதா. பொதுமக்களின் வரிப்பணத்தில் தானே சாலை அமைக்கப்படுகிறது. முதல்வரின் உறவினர் பணத்தில் சாலை அமைக்கவில்லையே. ஏன் இத்தனை மாதங்கள் ஆகிறது. அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை, மாவட்ட நிர்வாகம் தலையிடுவதில்லை. இதனால் தினம் தினம் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கஷ்டப்படுகிறார்கள். இங்கு முதல்வர் வரவேண்டும், சம்பந்தப்பட்டஅதிகாரிகள் வரவேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த டிஎஸ்பி ப.சுந்தரம், இன்ஸ்பெக்டர் ராஜாராம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்பி, பொதுமக்களுக்காக நியாயம் கேட்டு மறியலில் ஈடுபடும் என்னை சட்டப்படி கைது செய்யுங்கள், கூப்பிடும் தூரத்தில் உள்ள நெடுஞ்சாலை அதிகாரிகள் வரமாட்டார்களா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது டிசம்பர் 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றனர். இதையேற்று மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...