×

விருது பெற்ற பள்ளியில் அவலம் கழிவறை செல்ல வரிசையில் நிற்கும் மாணவர்கள்

காரைக்குடி, நவ.14: காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது. காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி பள்ளி கடந்த 2013-2014 கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட போது 218 மாணவர்கள் படித்தனர். பள்ளியின் சிறந்த நடவடிக்கை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களை நடத்தும் விதம் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை உயர்ந்து வருகிறது. தற்போது 1325 மாணவர்கள் உள்ளனர். இதில் மாணவர்கள் 775, மாணவிகள் 550 பேர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை இல்லை. பல அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு படாதபாடுபட்டு வரும் நிலையில் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது இங்கு மட்டுமே. தரம் உயர்த்தப்பட்ட போது இருந்த மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப இருந்த கழிப்பறையே உள்ளதால் பல மாணவர்கள் கழிப்பறையை பயன்படுத்தாத நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வயிறு சம்மந்தமான பிரச்சனை ஏற்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். பல்வேறு விருது பெற்ற இப்பள்ளியில் அடிப்படை வசதி என்பது போதுமான அளவில் இல்லை.

மாவட்ட கலெக்டர் தலையிட்டு நகராட்சி அதிகாரிகளுக்கு கழிப்பறை கட்ட சொல்லி உத்தரவிட்டும் பயனற்ற நிலையே உள்ளது என புகார் எழுந்துள்ளது. பெற்றோர் கலைமணி கூறுகையில், தனியார் பள்ளிக்கு இணையாக இப்பள்ளி வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வசதிகள் இல்லை. கழிப்பறையில் உள்ள பைப்புகளை சரி செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்ய வேண்டும். கை கழுவ கூடுதல் பைப் அமைக்க வேண்டும். மாணவர்கள் அமர போதிய பெஞ்ச் இல்லாததால் தரையில் அமர்ந்துள்ளனர். கழிவுநீர் கால்வாயை மூட சிலாப் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிறந்த உயர்நிலைப்பள்ளி விருது, தூய்மை பள்ளி விருது என பல்வேறு விருதுகளை பெற்றும் அடிப்படை வசதியில் பின்னடைவில் உள்ளது. 550 மாணவிகளுக்கு 8 கழிப்பறையும், 10 சிறுநீர் கழிப்பிடம் மட்டுமே உள்ளது.

அதேபோல் 775 மாணவர்களுக்கு 3 கழிப்பறையும், 10 சிறுநீர் கழிப்பிடம் மட்டும் உள்ளது. இதனால் மாணவர்கள் கழிப்பறையை பயன்படுத்த நீண்டநேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டியது உள்ளது. மாணவிகளுக்கு தேவையான நாப்கின் எரியூட்டும் வசதி இல்லை. கழிப்பறை வசதி செய்யக்கோரி நகராட்சியில் 100 முறைக்கு மேல் மனு கொடுத்தும் அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். வேண்டும் என்றே இப்பள்ளியை அதிகாரிகள் ஒதுக்கி வைத்துள்ளனர். அரசு பள்ளியை உயர்த்த நகராட்சி அதிகாரிகள் மனம் வைக்க மறுக்கின்றனர் என்றார்.

Tags :
× RELATED மது விற்றவர் கைது