×

மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

தர்மபுரி, நவ.14: தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தின் மூலம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் சார்பில், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்துடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சேவை தொழில்களுக்கு அதிக பட்சம் ₹3 லட்சமும், வியாபாரத் தொழில் திட்டங்களுக்கு ₹1 லட்சமும் வங்கிக் கடனாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது 11.10.2019 முதல் இந்த தொழில்களுக்கான திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டு, சேவை மற்றும் வியாபாரத் தொழில் திட்டங்களுக்கு ₹5 லட்சம் வரை கடனாக வழங்கலாம் என அரசாணை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்றவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம். உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ₹10 லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு அதிகபட்சம் ₹5 லட்சமும், வியாபாரத் தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சம் ₹5 லட்சமும் வங்கிக் கடனாக வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு (அதிகபட்சம் ₹1.25 லட்சம் வரை) மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

 விவசாயம் மற்றும் விவசாயத்துடன் நேரடியான தொடர்புடைய இனங்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது. 18 வயது நிரம்பியவர்கள் பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35, சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 வயதும். கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் வருடத்திற்கு ₹5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரோ, அவர்களின் குடும்பத்தினரோ எந்த ஒரு வங்கியிலும் தவணை தவறிய கடன்தாரராக இருப்பின், இத்திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியற்றவர். மேலும், ஏற்கனவே வேறு எந்த துறை மூலமாகவும், அரசு மானியத்துடன் கூடிய தொழில் கடன் திட்டத்தின் பயனாளிகளும் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற தகுதியற்றவர்.

தொழில் முனைவோரின் பங்களிப்பாக, திட்ட முதலீட்டில் 10 விழுக்காடு தொகையினை பொதுப் பிரிவினரும், 5 விழுக்காடு தொகையினை ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் வங்கியில் செலுத்த வேண்டும். இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர், இணையதளம் வாயிலாக மட்டும், கீழ்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதில் இணைக்கப்பட வேண்டிய புகைப்படத்துடன் கூடிய ஆவண நகல்கள் அனைத்தும் இணையதளத்தின் வாயிலாகவே, பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட இரு நகல்களை, அலுவலகத்தில் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. www.msmeonline.tn.gov/in/uyegp திட்டம் தொடர்பாக மேலும் தகவல் பெற பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, சேலம் மெயின்ரோடு, தர்மபுரி- 636705 சென்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : youths ,District Labor Center ,
× RELATED பாஜ பிரமுகர் கொலையில் 7 வாலிபர்கள் கைது