×

மழை பெய்தும் நிரம்பாத பொம்மசமுத்திரம் ஏரி

சேந்தமங்கலம்,  நவ.14: கொல்லிமலையில் தொடர் மழை பெய்த போதிலும், நீர்வழித்தட ஆக்கிரமிப்பால் சேந்தமங்கலம் அடுத்த  பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாமக்கல்  மாவட்டம், கொல்லிமலையில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  இதனால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள அருவிகளில்  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் ஐந்துநாடு,  பயில்நாடு பகுதிகளில் பலத்த மழை  பெய்துள்ளதால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர், காரவள்ளி பெரியாற்றில்  பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் வெண்டாங்கி வழியாக துத்திக்குளம்,  சின்னகுளத்திற்கு செல்கிறது. அந்த குளம் நிரம்பிய பிறகு உபரிநீர்  பொம்மசமுத்திரம் ஏரிக்கு வருகிறது.

இதனிடையே, கொல்லிமலையில் தொடர்மழை பெய்தும்,  இதுவரை சின்னகுளமே நிரம்பவில்லை. சேந்தமங்கலம் அடுத்த பொம்மசமுத்திரம்  ஏரிக்கு, தண்ணீர் சிறிதுகூட வரவில்லை. இந்த ஏரி முழுவதும்  சீமைக்கருவேல மரங்கள் முளைத்து, மழைநீர் மட்டுமே  தேங்கியுள்ளது. இதுகுறித்து  அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘பெரியாற்றில் தூர்வாரும் பணிகள்  மேற்கொள்ளாததால், தண்ணீர் பல வழிகளில் சென்று வீணாகி விடுகிறது. நீர்  வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு அதிகமுள்ளதால், ஆற்று நீரை விவசாயிகள் கரையை  உடைத்து, வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர்.  எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுத்து, நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக  அகற்றினால் தான், பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பும்,’ என்றனர்.

Tags : lake ,
× RELATED பரவலாக மழை பெய்தும் வறண்டு காணப்படும் உத்திரமேரூர் ஏரி