×

இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இன்னிசை நிகழ்ச்சி

பெங்களூரு, நவ. 14: பன்மொழி இசை கலைஞர், இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி வரும் நவம்பர் 16ம் தேதி பெங்களூருவில் பிரமாண்டமாக நடக்கிறது. இந்திய திரையுலக வரலாற்றில் அசைக்க முடியாத இசை பிரம்மாவாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்திருப்பதின் மூலம் புதிய சகாப்தம் படைத்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்மாநில மொழி திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல், இந்திமொழி படங்களுக்கும் இசை அமைத்திருப்பதின் மூலம் இந்தியாவில் தலைசிறந்த இசை அமைப்பாளர் என்ற பெருமை கொண்டுள்ளார். அவரின் இசையில் உருவான பாடல்கள் கடந்த தலைமுறையினர், தற்போதைய தலைமுறையினர் மட்டுமில்லாமல் எதிர்கால தலைமுறையினரும் கேட்டு மகிழும் வகையில் சாகா வரம் பெற்றுள்ளது.

தனது இசையின் மூலம் இந்தியா மட்டுமில்லாமல் உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு அவர்களின் அன்புக்கு பாத்திரமாக உள்ளார். இப்படி உலக புகழ் பெற்ற இசைஞானியின் இன்னிசை நிகழ்ச்சி முதல் முறையாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நவம்பர் 16ம் தேதி மாலை நடக்கிறது. இதில் பல முன்னணி பின்னணி பாடகர், பாடகிகள் பங்கேற்று இசை விருந்தளிக்கிறார்கள். இந்நிகழ்ச்சி குறித்து நமது செய்தியாளரிடம் இசைஞானி இளையராஜா கூறுகையில், நீண்ட காலத்திற்கு பின் பெங்களூரு ரசிகர்களை சந்திப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனது இசை பயணத்தில் எனக்கு பலர்  கொடுத்த ஒத்துழைப்பு தான் இந்த வளர்ச்சிக்கு காரணமாகும்.
நான் தனியாக பல இன்னிசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். முதல் முறையாக எனது குழுவில் உள்ள கலைஞர்களுடன் பிரமாண்ட இன்னிசை நிகழ்ச்சியை பெங்களூருவில் நடத்துகிறேன்.

மெர்குரி இன்டர்நேஷனல் மற்றும் அருண் மீடியாஸ் உடன்  ராஜ் இவன்ட்ஸ் இணைந்து  ஏற்பாடு செய்துள்ள இன்னிசை நிகழ்ச்சி நூறு சதவீதம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. பெங்களூரு ரசிகர்கள் விரும்பும் பாடல்கள் நிகழ்ச்சியில் பாடப்படும். பெங்களூருவில் நிகழ்ச்சி நடப்பதால் கன்னட பாடல்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல் அனைத்து மொழி ரசிகர்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் நிகழ்ச்சி அமையும். இன்னிசை நிகழ்ச்சியில் முன்னணி, பின்னணி பாடகர், பாடகிகள் பங்கேற்கிறார்கள். யார் யார் இசை விருந்தளிப்பார்கள் என்பதை இப்போது சொல்ல மாட்டேன். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும்.  எனது இசை பயணத்தின் புதிய மைல் கல்லாக இந்நிகழ்ச்சியை கருதுகிறேன். இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் Bookmyshow.com என்ற இணையதளத்திலும் +91 7373460606, 7402060606 மற்றும் 9902595177 என்ற நம்பரிலும் தொடர்பு கொள்ளலாம்.  நான் விரும்பும் மாநகரங்களில் பெங்களூரு முக்கிய இடம் பெற்றுள்ளது. மாநகர மக்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

Tags : Ilayaraja ,
× RELATED நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி...