சங்கரன்கோவிலில் சேதமடைந்த ஓடை பாலத்தால் விபத்து அபாயம்

சங்கரன்கோவில், நவ. 14:  சங்கரன்கோவிலில் சேதமடைந்த ஓடை பாலத்தால் விபத்து அபாயம் காணப்படுகிறது. சங்கரன்கோவில் திருநீலகண்டர் ஊரணி சாலையில், தற்போது சாலை பணிகள் நடந்து வருகிறது. கடந்த 11ம் தேதி சாலைப்பணிகளுக்கான மூலப்பொருட்களை ஏற்றி வந்த லாரி, மாதாங்கோவில் தெரு பகுதிக்கு உள்ளே சென்று திருப்ப முயன்றபோது லாரியின் பாரம் தாங்காமல் வலுவிழந்த பாலத்தில் நடுப்பகுதியில்  புதைந்தது. இந்த லாரியை சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் 2 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்டனர்.  மாதாங்கோவில் தெரு பகுதியில் தண்ணீர் குழாய் பதிக்கும் போது  இந்த பாலத்தில் தோண்டப்பட்ட பகுதியை சரியான முறையில் மூடவில்லை என கூறப்படுகிறது. தற்போது லாரி புதைந்து 4 நாட்களான நிலையில், சேதமடைந்த ஓடை பாலத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சேதமடைந்த பகுதியை சுற்றி கற்களை வைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் சாலை பணிகள் நடப்பதால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாதததால் தெரு பகுதி வழியாக சுற்றி செல்லும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் நடந்து செல்வோர், குழந்தைகள், வாகனங்களில் செல்வோர் குழியில் விழுந்து விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து சேதமான பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: