×

கடையம் அருகே ஓடை பாலத்தில் ரேடியம் ஸ்டெம்ப்கள் பொருத்தம்

கடையம், நவ. 14:  கடையம் அருகே ஓடை பாலத்தில் தடுப்பு வேலி இல்லாததால் விபத்து அபாயம் நீடித்து வந்த நிலையில். தினகரன் செய்தி எதிரொலியாf ஒளிரும் ரேடியம் ஸ்டெம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன.கடையம் அருகே சிவசைலத்தில் இருந்து கருத்தப்பிள்ளையூர் செல்லும் சாலையில் சாஸ்தா கோயில் ஓடை உள்ளது.  மழை காலத்தில் இந்த பகுதியில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஓடை பாலத்தின் வழியாக கடனா நதி ஆற்றில் சென்று கலக்கிறது. இந்த ஓடை பாலத்தின் ஒரு புறம் தார் சாலையில் இருந்து  சுமார் 7 அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளது. இதில் தடுப்பு வேலி இல்லாததால் விபத்து ஏற்படும் சூழல் நிலவியது. இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஓடையில் விழும் நிலை காணப்பட்டது.

இந்த சாலையை சிவசைலம், பங்களா குடியிருப்பு, கல்யாணிபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, கருத்தப்பிள்ளையூர், பூவன்குறிச்சி, வடமலைசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அரசு மற்றும் பள்ளி பேருந்துகள், மில் வேன்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ஓடை பாலம் சாலை மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதி என்பதால் வன விலங்குகளின் நடமாட்டமும் அதிகளவில் இருக்கின்றன. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம், இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து கடந்த அக்.29ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக விபத்துகளை தடுக்கும் வகையில்  ஓடை பாலத்தின் இருபுறமும் இரவு நேரங்களில் ஒளிரக் கூடிய ரேடியம் ஸ்டெம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தடுப்பு வேலி அமைத்தால் விபத்துகளை நிரந்தரமாக தடுக்கலாம் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : stream bridge ,outlet ,
× RELATED தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை...