உள்ளாட்சி அமைப்புகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியலை உடனே வெளியிட வேண்டும்

திருப்பூர்,  நவ.14: தமிழகத்தில் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான  இடஒதுக்கீடு பட்டியலைத் தாமதமின்றி, உடனடியாக வெளியிடுமாறு தமிழக அரசுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர்  முத்துக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில  அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் தொடர்பான பணிகளில் அரசு  நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான  வேட்பாளர் விருப்ப மனுக்களை தங்கள் கட்சியினரிடம் ஆளும் கட்சி பெற்று  வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம  ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி  அமைப்புகளிலும் பெண்கள், பட்டியலினத்தினர் போட்டியிடுவதற்காக ஒதுக்கீடு  செய்யப்பட்ட உள்ளாட்சி இடங்கள் விபரம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமல்  இருக்கிறது.

இது பற்றிய விபரங்களை அரசு நிர்வாகம்  ஏற்கெனவே  தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முறைப்படி அரசியல் கட்சியினருக்கு  இந்த விபரம் தரப்படவில்லை. அரசு அதிகாரிகளிடம் இது தொடர்பான முழு விபரங்கள்  இருப்பதாகத் தெரியவருகிறது. ஆனால் அதிகாரிகள் அரசியல் கட்சியினருக்கு இந்த  விபரங்களை வழங்காமல் தவிர்க்கின்றனர். அரசு நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை  ஆளும் கட்சியினருக்குச் சாதகமானதாகவும், உள்நோக்கம் கொண்டதாகவும் இருப்பதாக  சந்தேகம் ஏற்படுத்துகிறது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி  அமைப்புகளுக்கான தேர்தல் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி  பிரதிநிதிகளுக்கு இந்த இட ஒதுக்கீடு விபரங்களைத் தாமதம் செய்யாமல்,  உடனடியாக வெளியிட வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தொடர்புடைய  பட்டியலினத்தினர், பெண்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் ஜனநாயகப் பூர்வமாக  பங்கேற்றிடவும், முறைப்படி நேர்மையாக இத்தேர்தல் நடத்தப்படுவதை  உறுதிப்படுத்தவும் வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories: