வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வாடகை மையம் அமைக்க 40 சதவீதம் மானியம்

திருப்பூர், நவ 14: வேளாண்மை பொறியியல் துறை சார்பில்  வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.  இது குறித்து திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘வேளாண் பணியாளர்கள் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு மாநில அரசு வேளாண் இயந்திர மயமாக்குதல் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் பொது பிரிவிற்கு 6 வாடகை மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வாடகை மையம் அமைத்திட ரூ.25 லட்சம் என்ற மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம்  வரை மானியம் வழங்கப்பட உள்ளது.  வட்டார அளவில் அமைக்கப்படுவதால் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் சிறு வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் கிடைக்கும். இவ்வாறான மையங்களை அமைத்திட முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் போன்றோர் முன் வரலாம். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் இயந்திரங்களில் இருந்து தங்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம். தேர்வு செய்யப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான மொத்த தொகையை வரைவோலையாக(டி.டி) நிறுவனங்களின் பெயரில் செலுத்திட வேண்டும்.

அதன் நகலை வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரிடம் அளித்தவுடன் மாவட்ட செயற்பொறியாளர் மூலம் இயந்திரங்கள் கருவிகளின் முகவர்களுக்கு உரிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டு வேளாண்மை இயந்திர கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் ரூ. 25  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேளாண்மை வாடகை மையம் அமைக்க 40 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

மொத்த மானியத்தொகையில் பொதுப்பிரிவினருக்கு ரூ.5 லட்சம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ.3 லட்சம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் மானிய இருப்பு நிதி கணக்கில் இரண்டாண்டுகள் பராமரிக்கப்படும். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சரிபார்த்தபிறகு மானிய இருப்புத்தொகை அவரது வங்கிக்கணக்கில் திருப்பி வழங்கப்படும்.

இந்த வாடகை மையம் அமைக்க விரும்புவோர் உடனடியாக திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலை வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் (வே.பொ) ரவிச்சந்திரன் 94435 46015 , திருப்பூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வே.பொ),  ராஜேந்திரன் 94434 26277  மற்றும் தாராபுரம் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வே.பொ) சுப்பிரமணியன் 99427 03222, உடுமலை உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வே.பொ) விஸ்வநாதன் 9843273163 ஆகியோைர தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு விஜயகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Related Stories: