×

பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முயற்சி

திருப்பூர்,  நவ.14: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு பள்ளி  மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, பள்ளி கல்வித்துறை நடப்பாண்டு  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை,  இந்தாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும், அரசு பள்ளி மாணவர்களின்  கல்வித்தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு புதிய நடைமுறைகளை செயல்படுத்தி  வருகிறது. இதற்காக, பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் பள்ளி  ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி பயிற்சி அளிக்க  திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்தாண்டு அதிக சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி  ஆசிரியர்களை கொண்டு, குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளி  ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், எதிர் வரும்  காலங்களிலும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்தால், அனைத்து  ஆசிரியர்களும் பங்கேற்கும் கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு  விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். சில அரசு பள்ளிகளில் தேர்ச்சி  சதவீதம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இருந்தாலும், 80 சதவீதத்துக்கு  அதிகமாக மதிப்பெண் பெறுவதில் தனியார் பள்ளி மாணவர்களே அதிகம்.
மேலும், 30  சதவீதத்துக்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே தொழிற்கல்வியில்,  உயர்படிப்பை தொடர்கின்றனர். ஆகவே, தேர்ச்சி சதவீதத்தை மட்டும் கருத்தில்  கொள்ளாமல், மேல்படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்கள் நுழைவதற்கு ஏற்றவாறு  செயல்பட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Tags : school ,election ,
× RELATED புயல் வரும் அச்சத்தில் படகு, வலை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்