கடந்த ஆண்டை விட குழந்தை திருமணம் அதிகரிப்பு

திருப்பூர், நவ.14: திருப்பூர்  மாவட்டத்தில் குழந்தை திருமணம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக சைல்டு லைன், நோடல் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து சைல்டுலைன், மரியாலயா நோடல் அமைப்பின்  திட்ட இயக்குனர் லூர்துசகாயம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார்,  மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் ஆகியோர் கூறியதாவது.‘‘திருப்பூர் மாவட்ட நிர்வாகம், சமூக கல்வி மற்றும் முன்னேற்ற  மையம், மரியாலயா அமைப்பு நோடல் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. குழந்தைகள்  உரிமைகள், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சைல்டு லைன் அமைப்பு  மூலம் இலவச எண் 1098 கொண்ட பலகை வைக்கப்பட்டுள்ளது.  இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  முதல் நடப்பு ஆண்டு அக்டோபர் வரை சைல்டுலைன்  இலவச எண்ணிற்கு ஆயிரத்து 816 அழைப்புகள் வந்துள்ளது. இதில், 962 அழைப்புகளுக்கு  தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 7 குழந்தைகளுக்கு மருத்துவ உதவி, 77  குழந்தைகளுக்கு உடல் ரீதியான துஷ்பிரயோகம், 13 குழந்தை தொழிலாளர்கள்  மீட்பு, பாதுகாப்பு  தேவைப்படும் குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு 109 குழந்தை திருமணங்கள்  தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நடப்பு ஆண்டில் 133 ஆக குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது வேதனை  அளிக்கிறது.

குழந்தைகளின் நலன் கருதி திருப்பூர் மாவட்டம், சமூக கல்வி  மற்றும் முன்னேற்ற மையம், மரியாலயா ஆகியவை இணைந்து இன்று (14ம் தேதி) குழந்தைகள் தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்  சுரக்க்ஷா பந்தன் நிகழ்ச்சி நடத்த மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.  அதேபோல் 16ம் தேதி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ரயில் நிலையம்,  திருப்பூர் சில்வர் ஜூப்லி பூங்கா, டீப்-பம்ப் பள்ளி ஆகிய இடங்களில்  வெகுஜன விழிப்புணர்வு கூட்டம். 17ம் தேதி வளர் இன குழந்தைகள் பாதுகாப்பு  குறித்து காங்கேயம் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 18ம் தேதி  பசுமை புரட்சி, மரம் வளர்ப்பு குறித்து விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி,  அவிநாசி புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 19ம் தேதி திருப்பூர்-தாராபுரம் ரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் குழந்தைகள் பாலியல்  துன்புறுத்தல் மற்றும் உலக குழந்தைகள் பாதுகாப்பு நாள் குறித்து  விழிப்புணர்வு கருத்தரங்கம் நடக்கிறது. 20ம் தேதி திருப்பூர்  செல்லாண்டியம்மன் கோயில் அருகே இத்திட்டத்தின் 30 வது ஆண்டு விழா  நடக்கிறது. 22ம் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, மூலனுார் அரசு  மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் குழந்தைகள் மீது  பெற்றோரின் எதிர்பார்ப்பு,  பெற்றோரின் மீது குழந்தைகளின் எதிர் பார்ப்பு குறித்து கலந்துரையாடல், 23ம் தேதி பல்லடத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளுடன் நெருக்கம்  குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம். 25ம் தேதி கொடுவாய் அரசு  மேல்நிலைப்பள்ளி, சாமளாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் குழந்தைகள்  மீது  பெற்றோரின் எதிர்பார்ப்பு, பெற்றோரின் மீது குழந்தைகளின் எதிர்  பார்ப்பு குறித்து கலந்துரையாடல் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: