மாவட்டத்திலுள்ள 160 பள்ளிகளில் மதிப்பீடு நடத்தி தேசிய பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க முடிவு

ஊட்டி, நவ. 14:   நீலகிரி மாவட்டத்தில் 160 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மதிப்பீடு செய்து அதன் விவரங்களை மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்திற்கு சமர்பிக்கப்படவுள்ளது.  ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி சென்றடைய அனைத்து பள்ளிகளும் செயல்திறன் மற்றும் கற்றல் திறன்களிலும் பயனுள்ளதாக செயல்பட வேண்டும் என்ற தேசிய கல்வித் திட்டத்தால் உணரப்பட்டு பள்ளிகள், பள்ளி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்களில் இன்றியமையாத வளர்ச்சியைக் கண்டறிய பள்ளிக் கல்வித்துறை சிறப்பான முயற்சிகள் எடுத்து வருகிறது. பள்ளி வளர்ச்சி மற்றும் முழுமையான மதிப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படவேண்டும். இந்நிலையில், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீடு தேசிய திட்டத்தை வழி நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் துவக்க முயற்சியாக ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக கருத்தில் கொண்டு சுய முன்னேற்றத்திற்கான உத்திரவாதத்தோடு செயல்பட வேண்டும்.

இதில் பள்ளி முன்னேற்றம் என்பதே இத்திட்டத்தின் இன்றியமையாத தொலைநோக்கு பார்வையாகும். ேமலும், அனைத்து பள்ளிகளிலும் நிலையான மற்றும் முறையான மதிப்பீட்டை செயல்படுத்த இத்திட்டமானது 2016-17ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியினை ஏழு செயற்களங்கள் (1. பள்ளி வளங்களை கையாளுதல், 2. கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல், 3. கற்போரின் முன்னேற்றம் அடைவு மற்றும் வளர்ச்சி, 4. ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்த வளர்ச்சியினை நிர்வகித்தல், 5. பள்ளி தலைமை மற்றும் மேலாண்மை, 6. ஆக்கபூர்வமான சமுதாய பங்கேற்பு, 7. உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு) மூலம் சுய மதிப்பீடு செய்து அவ்விவரங்களை இதற்கென ஊருவாக்கப்பட்ட மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

 தற்போது பள்ளியின் சுய மதிப்பீட்டு விவரங்கள் அனைத்தும் அக மதிப்பீட்டு குழுவினரால் மதிப்பீடு செய்யப்படுகிறது. அகமதிப்பீடு குழு தலைவராக வட்டாரக் கல்வி அலுவலர்கள் செயல்படுவார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டாரங்களிலும் ஒரு வட்டாரத்திற்கு 40 பள்ளிகள் வீதம் 160 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசு மதிப்பீடு நடத்தப்பட்டு இவ்விவரங்கள் அனைத்தும் மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

Related Stories: