×

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் களைகட்டுமா?

கன்னியாகுமரி நவ. 14:    சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வரும் 17ம் தேதி முதல் ஜனவரி மாதம் 20ம் தேதி வரை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். இதையொட்டி கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி சார்பில் கடற்கரை சாலை, சன்னதி தெரு, பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகை முன்பு இருந்து காந்தி பஜார் வரை உள்ள மெயின் ரோடு ஆகிய 3 இடங்களில் தற்காலிக சீசன் கடைகள் அமைக்க ஏலம் விடப்பட்டது.இதுவரை 2 முறை நடைபெற்ற ஏலம் மூலம் 66 கடைகளை வியாபாரிகள் ஏலம் எடுத்து உள்ளனர். அடுத்த கட்டமாக நாளை (வெள்ளிக்கிழமை) 207 கடைகளுக்கு ஏலம் நடக்கிறது. இதுவரை கடைகள் மற்றும் கார் பார்க்கிங் ஏலம் மூலம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு ₹50 லட்சத்து 63 ஆயிரத்து 539 வருமானம் கிடைத்துள்ளது. சீசன் தொடங்க சில நாட்களே இருப்பதால் ஏலம் எடுத்தவர்கள் கடைகள் அமைக்கும் பணிகளை தொடங்கி விட்டனர். கடற்கரை சாலை, மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் பேரூராட்சி சார்பில் அளவிடப்பட்டுள்ள இடத்தில் கம்புகளை கட்டி கடைகள் அமைக்கப்படுகிறது.

இந்த கடைகள் மூலம் கடற்கரையின் அழகு மறைக்கப்படக்கூடாது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று 2 குப்பைத்தொட்டிகள் வைத்து குப்பைகளை பேரூராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. வருகிற 17ம் தேதிக்குள் அனைத்துக் கடைகளையும் கட்டி முடிக்க வேண்டும் என்பதால் இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் சீசன் காலத்தில் வியாபாரம் நன்றாக இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு புயல், மழை மற்றும் ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்ததால் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக வியாபாரம் சரிவடைந்தது. இந்த ஆண்டாவது கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் களைகட்டுமா? என்ற எதிர்பார்பில் வியாபாரிகள் உள்ளனர்.

Tags : season ,Kanyakumari ,
× RELATED மருத்துவ குணம் நிறைந்த பெர்சிமன் பழ சீசன் துவங்கியது