கோவை அரசு பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு

கோவை, நவ. 14: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வேலைநாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிக்கையை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

இதில், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பிற்கான கால அட்டவணையை தயாரித்து, அதன் அடிப்படையில் தினமும் ஒரு பாடத்திற்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும். இதில், 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை 8.30 மணி முதல் 9.15 மணிக்கும் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.

மேலும், மாலையில் 4.30 மணி முதல் 5.20 மணி வரை தினமும் ஒரு பாடத்திற்கு 25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரித்து தேர்வுகள் அல்லது சிறப்பு வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும். ேதர்வு நடத்திய பாடத்திற்கான விடைத்தாள்களை 2 நாட்களில் மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தேர்வு குறித்த மதிப்பெண்களை பதிவேட்டில் இணைத்து தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாணவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து பெற்று இருக்க வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர்கள் பராமரித்து வர வேண்டும். ஆய்வு அலுவலர்கள் பள்ளியினை பார்வையிடும் போது இது குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் சிறப்பு வகுப்பிற்கு ஆசிரிர்கள், மாணவர்களுக்கு தனித்தனி வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். சிறப்பு வகுப்புகள் நடைபெறாத பள்ளியின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்துள்ளார். இவரின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிறப்பு வகுப்புகளுக்கு நகர்ப்புற மாணவர்கள் வந்து செல்ல வசதிகள் இருக்கிறது எனவும் கிராமப்புற, மலைகிராம மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சூலூர், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், சாடிவயல், அரசூர் பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல குறித்த நேரத்தில் பேருந்து வசதி இல்லை. இதனால், அவர்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: