×

புலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைவாழ் மக்களின் உரிமைகள் பறிப்பதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு

ஈரோடு, நவ.14: புலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைவாழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த புலிகள் காப்பக கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு கூட்டம் தாளவாடியில் நேற்று முன்தினம் நடந்தது. தலமலை முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகி மோகன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கொங்கல்லி, ராமர்பாதம், கருவண்ணராயர், தொட்டகோம்பை, மாவநத்தம் ஆலமலை, கெஜலட்டி தர்க்கா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் மக்கள் காலம் காலமாக நடத்திவரும் வழிபாட்டினை புலிகள் காப்பகம் என்ற பெயரில் தடுக்க கூடாது. வனச்சாலைகளில் செல்லும் உள்ளூர்- வெளியூர் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கக்கூடாது. வனப்பகுதிக்குள் கால்நடை மேய்ச்சலை தடுக்கக்கூடாது. வனப்பொருட்களை சேகரிக்கும் பழங்குடிகளின் பாரம்பரிய உரிமைகளை பறிக்கக்கூடாது.

வன உரிமைச்சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை புலிகள் காப்பகம் என்ற பெயரில் சட்ட விரோதமாக தடை செய்யக்கூடாது. புலிகள் காப்பகம் என்ற பெயரால் மலைவாழ் மக்களின் சட்ட ரீதியான மற்றும் பாரம்பரிய உரிமைகளை பறிக்கக்கூடாது. மத்திய அரசு உத்தேசித்துள்ள வனப்பாதுகாப்பு சட்டத்திருத்தத்திற்கு தனது உறுதியான ஆட்சேபனையை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் தாளவாடியில் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கிராமத்தலைவர் அருள்வாடி லிங்கண்ணா, மதிமுக கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : hill country ,
× RELATED ஆயுளைக் காத்துத் தந்த அற்புதத் தலம்