திருச்செந்தூர்-நெல்லை சாலையில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நெல்லை, நவ. 14: திருச்செந்தூர்- நெல்லை ரோடு குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், தமிழக மாணவர் இயக்கத்தினர் திருச்செந்தூர் ஆர்டிஓ தனப்ரியாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  திருச்செந்தூர்- நெல்லை ரோட்டில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தனியார் இடத்தில் புதிதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இங்கு அமைக்கப்படும் டாஸ்மாக் கடையால் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் பிரச்னைகள் ஏற்படும். அத்துடன் இப்பகுதியில் கல்வி நிறுவன வாகனங்களின் நிறுத்துமிடமும் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். எனவே, இங்கு மதுக்கடை திறப்பதை தடுத்துநிறுத்துவதோடு, மக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளனர். மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் ஊர்ப் பிரமுகர்கள் சத்தியசீலன், செல்வகுமார், விநோத், ஜெயசீலன், தமிழக மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் மதன்ராஜ், அமைப்பாளர் அஜித், பொருளாளர் திருப்பதி விஜி, கலாம் சட்ட அலுவலக வக்கீல் பிரகாஷ் உளளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>