கோவில்பட்டி ஓணமாக்குளத்தில் மனுநீதி நாள் முகாம் ரூ.15.66 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி அருகே ஓணமாக்குளத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. முகாமில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பொதுமக்களிமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். மேலும் 88 பயனாளிகளுக்கு ரூ.15.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளவும், மக்களின் குறைகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தீர்க்கும் வகையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கோவில்பட்டி அருகே ஓணமாக்குளத்தில் முன்னோடி முகாம் நடத்தப்பட்டு 113 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 45 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது. நிகழ்ச்சியில் வருவாய் துறையின் மூலம் 59 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 21 பேருக்கு முதியோர் ஓய்வூதியம், வேளாண்மைத்துறை மூலம் 4 நபர்களுக்கும், தோட்டக்கலைத்துறை மூலம் 4 நபர்களுக்கும் என 88 நபர்களுக்கு ரூ.15.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த 2 மாதங்களாக பெய்து வருகிறது. மழை காலங்களில் பல்வேறு நோய் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. நமது மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு மிக குறைவாகவே உள்ளது என்றார்.முன்னதாக கலெக்டர் சமூக நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஓணமாக்குளம் மகளிர் திட்டம் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சங்கரநாராயணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சத்யநாராயணன், கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>