தூத்துக்குடியில் 2ம் கட்டமாக நடவடிக்கை 120 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தூத்துக்குடி, நவ. 14: தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் நேற்று 2ம் கட்டமாக  120க்கும் மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடி  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தனியார்  ஆக்கிரமிப்புகள் அவ்வபோது அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக போக்குவரத்து  முக்கியத்துவம் கொண்ட வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது. இதற்காக புதன்கிழமை  தோறும் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு சென்று ஆக்கிரமிப்பாளர்களைச் சந்தித்து வரும் மாநகராட்சி அதிகாரிகள், தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். முதல் வாரம் அறிவுறுத்தப்பட்ட பகுதிகளில் மறு வாரம் புதன்கிழமைக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில் அதிகாரிகளே நேரடியாகச் சென்று எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

 இதன்படி கடந்த வாரம் 6ம் தேதி பார்டர்பஜார், தெற்கு காட்டன்ரோடு, புதுக்கிராமம், விஇ  ரோடு எக்ஸ்ட்டன்சன், தேவர்புரம் ரோடு, தந்தி ஆபிஸ் ரோடு, தெற்கு புது தெரு   உள்ளிட்ட  பகுதிகளில் காணப்பட்ட ஆக்கிரமிப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள், அவற்றை அகற்றுமாறு எச்சரிக்கை  அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால், அதன்பிறகும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி  மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் பலர் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. .  இருப்பினும் எச்சரிக்கை விடுத்தும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர், ஊழியர்கள், பொக்லைன், ஜேசிபி உதவியுடனும், போலீஸ் பாதுகாப்புடனும் அகற்றினர். 2ம் கட்டமாக நேற்று மட்டும் ஒரே நாளில் 120க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்கிடையே தெற்கு  காட்டன்ரோட்டில் உள்ள ஒரு பழைய இரும்பு பொருட்கள் கடையில் இருந்த  ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். அப்போது அங்கு டெங்கு நோய்பரப்பும்  கொசுக்களை உற்பத்தி செய்யும் விதமாக மழை நீர் தேங்கும் விதத்தில்  ஆக்கிரமித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாநகராட்சி  அதிகாரிகள் அக்கடைக்கு ரூ.50 ஆயிர அபராதம் விதித்தனர்.  அத்துடன் வரும் 20ம் தேதியும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: