கழுகுமலை அருகே களப்பாளங்குளத்தில் மழைநீரால் சகதிகாடாக மாறிய சாலை

கழுகுமலை, நவ. 14: கழுகுமலை அருகே களப்பாளங்குளத்தில் பராமரிப்பின்றி உருக்குலைந்த சாலை, தொடர்ந்து பெய்த மழையால் சகதிகாடாக மாறியது. இதனால் அவதிப்படும் கிராம மக்கள், இச்சாலை விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். கழுகுமலை அருகே உள்ள குருவிகுளம் ஒன்றியத்திற்குட்பட்டது களப்பாளங்குளம் ஊராட்சி. இங்குள்ள அரசு ஆரம்பப்பள்ளி அருகே உள்ள சாலை சுமார் 10 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. அந்த சாலை பராமரிக்கப்படாததால் மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் தட்டுதடுமாறி சென்று வந்தன. இரு சக்கர வாகனங்களில் செல்வோரும், 4 சக்கர வாகனங்களும் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

Advertising
Advertising

தற்போது வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் வாறுகாலில் இருந்து வரும் கழிவுநீரும் அதில் கலப்பதினால் வயல்வெளி போல்   சகதி காடாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், களப்பாளங்குளம் சாலையை பார்வையிட்டு  உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: