எஸ்.குமரெட்டியாபுரம் கிராம சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி அருகே எஸ்.குமரெட்டியாபுரம் வழியாக சோலார் நிறுவன கனரக வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தக்கோரி கிராம மக்கள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கோவில்பட்டி அருகே கடம்பூரில் இருந்து பசுவந்தனை இடையே அமைந்துள்ள தென்னம்பட்டி, ஓனமாக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் சுமார் 800 ஏக்கரில் தனியார் நிறுவனம் சார்பில் சேலார் மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான உதிரிபாகங்கள் வடமாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.இந்த கனரக வாகனங்கள் தினமும் கோவில்பட்டி அருகே எஸ்.குமரெட்டியாபுரம் கிராமம் செல்லும் பஞ்சாயத்து சாலை வழியாக செல்கின்றன. மிகவும் குறுகலான இந்த கிராம சாலை வழியாக அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் செல்வதால் இச்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்தில் சிக்குகின்றனர்.

கடந்த 3 மாதங்களாக அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால் கிராம சாலை மிகவும் சிதிலமடைந்து விட்டது. கனரக வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை உள்ள நிலையில், கிராமச் சாலை வழியாக செல்வதால் விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே தங்கள் கிராமம் வழியாக கனரக வாகனங்கள் செல்வதை உடனடியாக தடுக்கக்கோரி எஸ்.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் ஆறுமுகபெருமாள் தலைமையில் நேற்று கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் வரதராஜன், சண்முகம், சுப்பையா, கிருஷ்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் தங்களது கோரிக்கை மனுவை ஆர்டிஓ அலுவலக நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் அளித்தனர்.

Related Stories:

>