×

வர்தா புயலில் சேதமான பூண்டி நீரியல் நீர்நிலையியல் மையத்தில் மாதிரி வடிவுகள் சீரமைப்பதில் மெத்தனம்: ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கியும் பயன் இல்லை

திருவள்ளூர், நவ. 14: திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கம் அருகே, நீரியல்  நீர்நிலையியல் மையத்தில் உள்ள பாசன அமைப்பின் மாதிரி வடிவுகள், கடந்த வர்தா புயலின்போது முற்றிலும் சேதமானது. இதை சீரமைக்க ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கத்தில் 1941ம் ஆண்டு கட்டப்பட்ட, நீரியல் மற்றும் நீர்நிலையியல் ஆய்வு மையமும் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில், நீரியல், நீர்நிலையியல் மற்றும் கடலோர கட்டுமானங்கள் சம்பந்தப்பட்ட மாதிரி வடிவமைப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 82 அணைகள் உள்ளன. தமிழ்நாடு மின் வாரியத்தின் கீழ் 38 அணைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர், நீர் நம்முடைய நீர்தேக்கங்களை வந்தடைகிறது. இந்த அணைகள் மற்றும் நீர் தேக்கங்களின் கீழ் கால்வாய் அமைப்புகள் மற்றும் ஏரிகள் உள்ளன.
மாநிலத்தில் மொத்தமுள்ள 39,202 ஏரிகளில் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலத்தின் நிகர பாசனப் பரப்பு 2008-09 ஆண்டில் 29.31 லட்சம் எக்டேராகும். இதில் 7.66 லட்சம் எக்டேர் கால்வாய்கள் மூலமும், 5.40 லட்சம் எக்டேர் ஏரிகள் மூலமும் 16.14 லட்சம் எக்டேர் திறந்த வெளி மற்றும் குழாய்க் கிணறுகள் மூலமும், மீதமுள்ள 0.11 லட்சம் ஹெக்டேர் இதர ஆதாரங்கள் வாயிலாகவும் பாசனம் பெறுகின்றன.
பூண்டி நீரியல் மற்றும் நீர்நிலையியல் மையத்தில், மாநிலத்தின் கடற்கரையோரங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்கிறது.

இங்கு, மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் தேக்கப்படும் முறை, நீர் திறக்கப்படும் முறை, பாசனப் பகுதிகள் என பல தகவல்கள் மாதிரி வடிவமும் அமைக்கப்பட்டு உள்ளது. இவையனைத்தும், கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலில் முற்றிலும் சேதமானது.மேலும், பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள விருந்தினர் மாளிகை பாழடைந்து பராமரிப்பின்றி உள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனின் கோரிக்கையை ஏற்று, அரசு ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது. ஆனால், இதுவரை அதற்கான பணிகளை பொதுப்பணித்துறை செய்யவில்லை. இதனால், இங்கு சுற்றுலா வரும் பயணிகள் மற்றும் சிவில் பொறியாளர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, பூண்டி நீர்த்தேக்கத்தில் உள்ள நீரியல் மற்றும் நீர்நிலையியல் மையத்தை உடனடியாக சீரமைத்து மக்கள் பார்வைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Pooja Aquatic Hydrology Center Damaged ,Vardha Storm ,
× RELATED 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயிலை புனரமைக்க வலியுறுத்தல்