×

ஆவடி, சங்கரர் நகரில் முடங்கிக்கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் திருட்டு கழிவு நீர் இணைப்பு: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி

ஆவடி, நவ.14: ஆவடி மாநகராட்சி, சங்கரர் நகரில் முடங்கி கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் திருட்டுத்தனமாக கழிவுநீர் கலப்பதால்  அப்பகுதி மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதிப்படுகின்றனர்.    ஆவடி மாநகராட்சி, 18வது வார்டில் சங்கரர் நகர் உள்ளது. இங்கு உள்ள 10க்கும் மேற்பட்ட தெருக்களில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த நகரின் முக்கிய பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டதிற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதற்கான சுத்திகரிப்பு நிலைய பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால், மாநகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கான இணைப்பு இன்னும் கொடுக்கவில்லை. ஆனால், குடியிருப்புவாசிகள் சிலர் திருட்டுத்தனமாக பாதாள சாக்கடையில் கழிவுநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால்,  சங்கரன் நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

   இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சங்கரர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த திட்டத்துக்கான  சுத்திகரிப்பு நிலையம் பணிகள் இன்னும் கிடப்பில் கிடக்கிறது. இதனையடுத்து, குடியிருப்பு பகுதி வீடுகளில் அடிக்கடி தொட்டியில் கழிவு நீர் நிறைந்துவிடுகிறது. இதனை அகற்ற தனியார் கழிவு நீர் ஊர்திகள் மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட இருமடங்கு வசூலிக்கின்றன. ஆனால் பலர் மேற்கண்ட பகுதியில் தொட்டியில் கழிவு நீர்  நிறைந்த பிறகும், அதனை அகற்றாமல் விட்டு விடுகின்றனர். இந்த கழிவுநீர், பகுதிகளில் சாலையோரத்தில் தான் ஓடுகிறது. இதோடு மட்டுமல்லாமல், சில குடியிருப்புவாசிகள் முடங்கிக் கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் திருட்டுத்தனமாக தொட்டியில் இருந்து கழிவுநீர் இணைப்பு கொடுத்துள்ளனர்.  இதன் காரணமாக, பல இடங்களில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவு நீர் வெளியேறி சிமென்ட் சாலையில் ஆறாக  ஓடுகிறது. பின்னர், இந்த கழிவுநீர் காலி இடங்களிலும், வீட்டை சுற்றிலும் தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, கழிவுநீரில் இருந்து கொசுக்கள் லட்சக்கணக்கில் உற்பத்தியாகிறது. இதனால் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே அப்பகுதி மக்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். எனவே, இனி மேலாவது ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து சங்கரர் நகர் பகுதியில் முடங்கிக் கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் கொடுத்துள்ள கழிவுநீர் இணைப்பை துண்டிக்கவும், அதனை கொடுத்த குடியிருப்புவாசிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Theft ,
× RELATED அரசு பள்ளியில் லேப்டாப்கள் திருட்டு