×

திருநின்றவூர் ஏரியில் சேற்றில் சிக்கி தாய், மகள் பலி: மாடுகளை விரட்டியபோது சோகம்

திருநின்றவூர், நவ.14: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, மண்ணுளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செஞ்சுராமன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவரது மனைவி சுகுணா (49). இவர்களுக்கு குமாரி (25), கமலக்கண்ணன் (22) என மகள், மகன் உள்ளனர்.
சுகுணாவும் குமாரியும் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தனர். இருவரும் தினமும் காலையில் வீட்டில் இருந்து மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து  சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்றுமுன்தினம் சுகுணா, குமாரி இருவரும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. மேலும், மாடுகளும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து கமலகண்ணன்  உறவினர்களுடன் சேர்ந்து இருவரையும் பல இடங்களில் தேடியுள்ளார்.
 அப்போது, திருநின்றவூர் பெரிய ஏரியில் சுகுணா, குமாரி இருவரும் சடலமாக தண்ணீரில் கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

தகவலறிந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கமலக்கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், திருநின்றவூர் பெரிய ஏரி அருகில் சுகுணா, குமாரி இருவரும் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, மாடுகள் ஏரிக்குள் ஓடியது. இதனை பார்த்த இருவரும் மாடுகளை காப்பாற்ற ஓடியபோது, சேற்றில் சிக்கி இருவரும் இறந்தது தெரியவந்தது.  மேலும், இவர்கள் இருவரது சாவில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : lake ,Thiruninvur ,
× RELATED சிங்கப்பெருமாள்கோவில் அருகே ஏரியில்...