×

ஆமை வேகத்தில் நடக்கும் சாலை விரிவாக்கப்பணியால் காற்று மாசு ஏற்பட்டுள்ள கோவூர் பிரதான சாலை

* சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்களால் வாகன ஓட்டிகள் அவதி
* கண்டு கொள்ளாத நெடுஞ்சாலை துறை
குன்றத்தூர், நவ. 14: குன்றத்தூரில் இருந்து போரூர் செல்லும் பிரதான சாலை, கோவூர் மெயின் ரோட்டில் சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்களால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் கடும் அவதியடைகின்றனர். இதனை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள முக்கியமான சாலைகளில் குன்றத்தூர் - போரூர் சாலையும் ஒன்று.
தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன. மேலும், போரூரில் இருந்து குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளுக்கு விரைவாக செல்வதற்கு இந்த சாலையே பிரதான சாலையாக உள்ளது.முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இதுவரை அந்த பணிகள் முடிக்காமல் ஆமைவேகத்தில் நடக்கிறது.இதனால், கோவூர் அருகே மெயின் ரோடு முழுவதும் ஜல்லி கற்கள் பரவி கிடக்கின்றன. இதையொட்டி, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக பைக்கில் செல்வோர், அடிக்கடி கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். மேலும், கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுகிறது.மேலும், சேதமடைந்த சாலையில் பறக்கும் தூசுகள், அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் பரவி, உணவு பொருட்களும் நாசமாகின்றன.தற்போது, தலைநகர் டெல்லிக்கு அடுத்த படியாக காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை இடம் பிடித்துள்ளது.

மேலும், அதிகப்படியான காற்று மாசுபாடு என்பது பழுதடைந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த வேளையில், மந்தகதியில் நடந்து வரும் குன்றத்தூர் - போரூர் பிரதான சாலை விரிவாக்க பணிகளை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால், விபத்துக்கள் வெகுவாக குறைவதுடன், காற்று மாசுபாடு அடைவதும் தவிர்க்கப்படும். மக்களும் நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வாழ வழிவகை செய்யும் என்றனர்.

Tags : road ,Kovur ,
× RELATED டெல்லி மாநிலத்தில் காற்று மாசு அதிகம்...