மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருவொற்றியூர் சன்னதி தெருவில் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமையான கோயில் என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தக் கோவில் வாசலில் உள்ள திருக்குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் தெப்ப உற்சவம் நடத்துவதில் சிரமம் உள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது சன்னதி தெரு, வடக்கு மாடவீதி ஆகிய பகுதிகளில் தெருவோரம்  பல லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு அந்த மழை நீர் திருக்கோயில் குளத்திற்கு  வரும்படி கட்டமைக்கப்பட்டது.

ஆனால் திருவொற்றியூர் மாநகராட்சி ஆனபிறகு இந்த குளத்தை அதிகாரிகள் சரியாக பராமரிக்கவில்லை.  இதனால் கால்வாயில் சேறும் சகதியுமாக தூர்ந்து விட்டது. அது மட்டுமின்றி சாலையோரம் கால்வாயை ஆக்கிரமித்து நடைபாதை அமைத்து இருப்பதோடு  வீடுகளில் உள்ள கழிவு நீரை இந்த மழைநீர் கால்வாயில் விடுவதால் திருக்குளத்திற்கு கழிவு நீர் வர ஆரம்பித்தது. இதையடுத்து கால்வாயில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் அடைக்கப்பட்டது. கால்வாயை தூர்வார வேண்டும் வீடுகளில் இருந்து வரக்கூடிய கழிவு நீரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பக்தர்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாட்கணக்கில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி விடுவதால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது.

இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் சன்னதி தெருவில் துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக பக்தர்கள் செல்லும்போது முகம் சுளித்தனர். இதையடுத்து சன்னதி தெருவில் மழைநீர் கால்வாயை சீரமைக்காத அதிகாரிகளை  கண்டித்து போராட்டம் செய்ய சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் திட்டமிட்டனர். திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் சன்னதி தெருவுக்கு நேற்று காலை வந்து அங்குள்ள மழைநீர் கால்வாய் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது   தமாகா மாவட்ட பகுதி தலைவர் சிவகுமார், பாஜ மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் சன்னதி  தெருவிற்கு வந்து அங்கிருந்த அதிகாரியிடம் மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஒரு வாரத்திற்குள் கால்வாயில்  ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைப்பதாக கூறி அனைவரையும்  சமாதனம் செய்தனர். பின்னர் அதிகாரிகள்  மழைநீர் கால்வாய்களை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து பாதாள சாக்கடை தொட்டியிலிருந்து கழிவு நீர் நிரம்பி மழைநீர் கால்வாயில் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. கழிவுநீர் வருவதை சரி செய்த அதிகாரிகள் மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட  சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: