வேளச்சேரியில் தூர்வாராமல் கிடக்கும் மழைநீர் வடிகால்வாய்: கழிவுகளால் தொற்று நோய் அபாயம்

சென்னை: வேளச்சேரி மெயின் ரோடு செக் போஸ்ட் அருகில் ராஜ்பவன் காலனி உள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள சிறிய பாலத்துக்கு கீழ் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் பெருக்கெடுத்து ஓடும்போது இந்த மழைநீர் வடிகால்வாய் மூலம் மழை தண்ணீர் வெளியேற்றப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மழைநீர் வடிகால்வாய் வழியாக செல்லும் மழைநீர் அங்கிருந்து நேராக வேளச்சேரி ஏரிக்கு செல்ல வேண்டும். ஆனால் 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது அடித்து வரப்பட்ட கழிவுகள் அனைத்தும் இந்த பாலத்துக்கு கீழ் தேங்கியது. அன்று முதல் அப்படியே மணல் மேடாக காணப்படுவதால் தேங்கி கிடக்கும் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் சாக்கடை கழிவுகளாக மாறிவிட்டது.

தற்போது மழைநீர் செல்லும் வடிகால்வாய் முழுவதும் சாக்கடை கழிவுகள் திட்டுகளாக தேங்கி கிடக்கிறது.

 அதுவும் மழை காலங்களில் கேட்கவே வேண்டாம். அந்த அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. தேங்கி கிடக்கும் சாக்கடை கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தியாகி சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவி வருவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.  இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தபோது, மழைநீர் வடிகால்வாய் என்பதால் மாநகராட்சியில் புகார் செய்ய சொல்லியுள்ளனர். சென்னை மாநகராட்சியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் கொடுத்த நிலையில், ஆய்வு செய்ததோடு சரி. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: