அம்பத்தூர் - வானகரம் சாலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: வாகன ஓட்டிகள் அச்சம்

அம்பத்தூர்: அம்பத்தூரில் இருந்து, அம்பத்தூர் குப்பம், அத்திப்பட்டு, அயனம்பாக்கம் வழியாக வானகரத்திற்கு நெடுஞ்சாலை செல்கிறது. இதனை அம்பத்தூர் - வானகரம் நெடுஞ்சாலை என அழைக்கின்றனர். இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை செல்லும் பகுதியில் அம்பத்தூர் முதல் அயனம்பாக்கம் வரை பெரிய தொழிற்சாலை, சிறு குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும், இதே சாலையில் தனியார், அரசு பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளும் ஏராளமாக அமைந்துள்ளன. இந்த சாலையை தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.  இச்சாலை அமைந்துள்ள அத்திப்பட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த கால்வாயானது, சாலையில் இருந்து 4 அடி கீழே ஆழத்தில் அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினமும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “அம்பத்தூர் - வானகரம் சாலையில் அத்திப்பட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய்  திறந்த வெளியில் உள்ளது. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக கட்டப்படாமல் தற்காலிக கால்வாயாக அமைந்துள்ளது. இந்த கால்வாயை கடந்து தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருகின்றனர். இச்சாலை வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் பெற்றோர்களும் தினமும் கால்வாய் பகுதியை கடக்கும்போது அச்சத்துடன் சென்று வருகின்றனர்.  இதோடு மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்லும் தொழிலாளர்கள் சில நேரங்களில் கால்வாய் பள்ளத்தில் விழுந்து  காயமடைகின்றனர். மேலும், திறந்து கிடக்கும்  கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

இந்த கால்வாயில் குப்பை கழிவுகள் மக்கி துர்நாற்றம் வீசுகின்றது. மேலும், இதிலிருந்து கொசுக்கள் லட்சக்கணக்கில் உற்பத்தியாகி அருகிலுள்ள கம்பெனி, குடியிருப்புகளில் புகுந்து விடுகின்றன. இவைகள் கடித்து தொழிலாளர்கள், பொதுமக்கள் மக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அத்திப்பட்டு பகுதியில் வடமாநில தொழிலாளர் பலருக்குப் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது மட்டுமில்லாமல், குடியிருப்பு பகுதியில் வசிக்கும் குழந்தைகள், சிறுவர்கள் அடிக்கடி வீடுகளை விட்டு வெளியேறி வானகரம் நெடுஞ்சாலைக்கு வருகின்றனர்.

அப்போது அவர்கள் கழிவுநீர் கால்வாயில் உள்ள பள்ளங்களில் தவறி விழுந்து காயம் ஏற்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை அம்பத்தூர் மண்டல அதிகாரிகளிடம் நேரில் சென்று புகார் அளித்தனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.  இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினமும் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, இனி மேலாவது அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் கவனித்து அம்பத்தூர் - வானகரம் நெடுஞ்சாலையில் உள்ள சாலையில் அத்திப்பட்டு பகுதியில் உள்ள திறந்த வெளி கால்வாயை சீரமைத்து மூடிய நிலையில் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: