உரம் விஷயத்தில் அரசு நடவடிக்கை: மேலும் 75 டன் யூரியா விரைவில் வருகிறது

காரைக்கால், நவ. 13: புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான பாசிக் நிறுவனத்தின் தலைவராக நான் பதவியில் இருந்தபோது, பாசிக்கின் லாபம் ரூ.3 கோடியாக இருந்தது. பொதுமக்கள், விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலான செயல்பாடுகளிலும் பாசிக் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. .ஆனால் முதல்வர் ரங்கசாமி ஆட்சியின்போது பாசிக் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்கள், பல்வேறு காரணங்களால் நலிவடைந்து விவசாயிகளுக்கு உதவ முடியாமல் மூடப்பட்டு விட்டது.இந்நிலையில் பாசிக் மூலம் உர விநியோகம் செய்வது சாத்தியம் இல்லாததை உணர்ந்து அரசு, தற்போதைய சம்பா, தாளடிக்கு உரம் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்த, யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்றவற்றை மார்க்கெட்டிங் சொசைட்டி மூலமாகவும், அங்கீகாரம் பெற்ற தனியார் விற்பனையாளர் மூலமாகவும் வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளோம். யூரியாவை பொறுத்தவரை உற்பத்தியகங்களில் நிலவும் பிரச்னையால் காலத்தோடு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இது புதுச்சேரியில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இதன் தாக்கம் இருந்தது. எனினும் புதுச்சேரி அரசின் முயற்சியால் காரைக்காலுக்கு தேவையான யூரியா வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 50 டன் யூரியா வந்து விநியோகம் நடைபெறுவதோடு, மேலும் 75 டன் யூரியா அடுத்த சில நாட்களில் வரவுள்ளது. நிலத்தின் அளவை பொறுத்து குறிப்பிட்ட அளவு உரம் வழங்கப்பட்டு வந்தாலும், கூடுதலாக நிலம் வைத்திருப்போருக்கு உரிய தேவைக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரத்தை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளாமல், தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளவும். தற்போதைய பருவத்துக்கு எவ்வளவு யூரியா போன்ற பேரூட்ட உரங்கள் இட வேண்டும் என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும். மேலும் வேளாண் அமைச்சர் என்பதைவிட நானும் ஒரு விவசாயி என்பதாலே இக்கருத்தை தெரிவிக்கிறேன். முக்கியமாக உரம் விவகாரத்தில் விவசாயிகளின் தேவையறிந்து அரசு விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் ஒரு சில அரசியல்வாதிகள் அரசியல் செய்வதற்காக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனை விவசாயிகள் ஒரு போதும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: