நிதி நெருக்கடி எதிரொலி: மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி

வில்லியனூர், நவ. 13:  நிதி நெருக்கடி காரணமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வில்லியனூர், கோட்டைமேடு, ஒதியம்பட்டு, உத்திரவாகினிபேட், கணுவாப்பேட்டை, ஆரியப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். 24 மணிநேரமும் இயங்கி வருவதால் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.  இப்பகுதிகளில் உள்ள புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனை நவீன முறையில்  விரிவுப்படுத்த புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பொதுமக்களிடத்தில் உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி இல்லாமை ஆகியவற்றின் காரணமாக ரத்த அழுத்தம் நோய் அதிகரித்துள்ளது.

உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பரிசோதனைக்கு பின் 15 நாட்களுக்கு ஒருமுறை மாத்திரை வாங்கி செல்லலாம்.

கடந்த சில நாட்களாக ஒரு சில மாத்திரைகள் மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. அப்போது சில மாத்திரைகள் மட்டும் வெளி சந்தையில் வாங்கிக்கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறி வந்தனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், நேற்று ரத்த அழுத்தத்துக்கு தரப்படும் அம்லோடிபைன்,  என்வாஸ், ஆஸ்பிரின் உள்ளிட்ட அனைத்து மாத்திரைகளும் இல்லை என நோயாளிகளை திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும், மீண்டும் நோயாளிகள் கேட்டதால் மர்ம நபர் ஒருவர், விளம்பர பலகையில் மாத்திரை இல்லை என எழுதி வெளியே வைத்துவிட்டார். இதேபோல், திருக்கனூர் அரசு மருத்துவமனையிலும் உயர் ரத்த அழுத்த மாத்திரை தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து மருத்துவமனையில் விசாரித்தபோது, அரசு மருந்தகத்தில் மாத்திரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் மாத்திரை கேட்டால் இல்லை என கூறுகின்றனர் என்றனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது:  மருந்து தட்டுப்பாடு இல்லை என மறுத்துவிட முடியாது. மருந்துகளை அரசுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு பணம் சரியான நேரத்துக்கு தரவில்லையென்பதால் மருந்துகளை கொடுக்க மறுக்கின்றனர். எப்படியிருந்தாலும் அரசு பணம் கொடுக்கும் என்பதை  சொல்லியும் அவர்கள் கேட்பதில்லை. இருப்பினும் முதல்வர், அமைச்சர்கள் மருந்து தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்படி மருந்து இல்லையென எழுதியெல்லாம் வைக்க மாட்டார்கள். யாரோ வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள். மருந்து தட்டுப்பாடு உடனடியாக சரி செய்யப்படும் என்றனர்.

Related Stories: