×

புதுவையிலும் வழுக்கி விழுந்த குற்றவாளிகள்

தமிழ்நாட்டில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது அம்மாநில போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமீபகாலமாக அங்கு, போலீசாரின் சிறப்பு `கவனிப்பு’ காரணமாக குற்றவாளிகள் பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் புதுவையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிக்குள் புதுச்சேரி ரவுடிகள் தங்களது நடவடிக்கைகளை அடக்கியே வாசிக்கின்றனர். ஆனால், புதுச்சேரி ரவுடிகள், புதுவை பகுதிக்குள் சர்வசாதாரணமாக உலா வருகின்றனர். கொலை, கொள்ளை குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் குற்றவாளிகள் சில நாட்களிலேயே வெளியே வந்து மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுவும், கடந்த சில நாட்களாக வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.

ரவுடி அன்பு ரஜினி கொலையை தொடர்ந்து ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று மாலை அன்பு ரஜினி கொலை வழக்கில் கைதான 4 பேரையும் பத்திரிகையாளர்களிடம் காண்பித்தபோது அவர்களில் முதல் குற்றவாளி ராமிற்கு கை உடைந்து கட்டு போட்டு இருந்ததும், 3வது குற்றவாளி ஜெரோமிற்கு கால் உடைந்து கட்டு போட்டிருந்ததும் தெரியவந்தது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் போலீசாரின் சிறப்பு `கவனிப்பால்’ பாத்ரூமில் வழுக்கி விழுந்திருப்பதாக தெரிகிறது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டதற்கு, கொலை செய்து விட்டு தப்பி ஓடியபோது பைக்கில் இருந்து 2 பேரும் தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

வெடிகுண்டு தயாரிப்பதை தடுக்க நடவடிக்கை
பத்திரிகையாளர் சந்திப்பில் சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் கூறும்போது, பட்டாசு தயாரிப்பவர்கள் மற்றும் குடோனில் இருந்து மருந்துகளை குற்றவாளிகள் வாங்கி நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். இதனால் பட்டாசு தயாரிப்போரை தீவிரமாக கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். பட்டாசு மற்றும் மருந்துகளை அதிக அளவில் வாங்கும் நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி இருக்கிறோம். லைசென்ஸ் இல்லாமல் பட்டாசு தயாரித்தால் அதுபற்றியும் விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். சிறையில் இருந்து தான் முக்கிய குற்றவாளி சோழன் ஏவியதன்பேரில் இக்கொலை நடந்துள்ளது. அந்த நம்பரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அந்த நம்பருக்கு யார், யார் பேசியது, சிறையில் யார், யாரெல்லாம் அவரை சந்தித்து பேசியது போன்ற தகவல்களையும் சேகரித்து வருகிறோம் என்றார். அப்போது எஸ்பி மாறன், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...