முத்தியால்பேட்டை கொலை வழக்கில் ரவுடி சோழனை காவலில் விசாரிக்க போலீஸ் நடவடிக்கை

புதுச்சேரி, நவ. 13:  முத்தியால்பேட்டை ரவுடி அன்பு ரஜினி கொலை வழக்கில் காலாப்பட்டு சிறையில் உள்ள ரவுடி சோழனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தலைமறைவான அவரது தம்பியை தனிப்படையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் அன்பரசன் என்ற அன்புரஜினி (34). ரவுடியான இவர், கடந்த 10ம் தேதி சாலைத்தெருவில் காரில் வந்தபோது மர்ம கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் லாஸ்பேட்டை ரவுடி ேசாழன் தூண்டுதலின்பேரில் பாண்டியன், முதலியார்பேட்டை ஜெரோம் தலைமையிலான கும்பல் அவரை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக 7 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் 2 தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

Advertising
Advertising

இந்நிலையில் கருவடிக்குப்பத்தில் பதுங்கியிருந்த ராமச்சந்திரன் என்ற ராம், நிவாஸ், ஜெரோம் என்ற பிரபு, சூரியா 4 பேரும் நேற்று முன்தினம் இரவு போலீஸ்வசம் சிக்கினர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில், ரவுடி சோழனின் நெருங்கிய நண்பர் அனிச்சங்குப்பம் வினோத் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டதும், அந்த கொலை குற்றவாளிகளுக்கு அன்புரஜினி உதவி செய்து வந்துள்ளதும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சோழன் தலைமையிலான கும்பல் அவரை தீர்த்துக் கட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 4 பேரிடம் இருந்து 5 கத்தி, ஒரு பைக், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான சோழனின் தம்பியான கிருஷ்ணா நகர் பாண்டியன், குருசுகுப்பம் சந்துரு, சோலைநகர் டூம் மணி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். பாண்டியன் மீது காமராஜர் நகர் இடைத்தேர்தலுக்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்  நிலையில், அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொலையுண்ட அன்புரஜினியின் இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற நிலையில் அவரது உடல் கருவடிக்குப்பம் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி சோழன் காலாப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் முத்தியால்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்ேபரில், நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் முறையிட முடிவு செய்துள்ள போலீசார், அவரை விரைவில் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த உள்ளனர்.

Related Stories: