குளங்களை போல் கிணறுகளையும் தூர்வாரி பராமரிக்க வலியுறுத்தல்

காரைக்கால், நவ. 13:  காரைக்காலில் கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. வேளாண் துறை கூடுதல் இயக்குநர் செந்தில்குமார் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காரைக்காலில் நம் நீர் என்ற திட்டத்தை கொண்டு குளங்களை தூர்வாரப்பட்டதற்காக விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் குளங்கள் தூர்வாரப்பட்டது போல் பல்வேறு பகுதியில் உள்ள கிணறுகளையும் தூர்வாரி பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். உரங்கள், யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தற்போது வழங்கப்படும் யூரியா போதுமானது அல்ல. அடி உரம், பூச்சி மருந்துகளை அரசு மூலமாகவே வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை காலத்தோடு அதிகரிக்க வேண்டும்.

விவசாய நிலங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் உள்ளூர் பகுதி விவசாயிகள், தாங்கள் பயிரிடும் காய்கறிகளை காரைக்கால் வாரச்சந்தையில் விற்று வருகிறார்கள். மழை நேரங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் அங்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் விற்பனை குறைவாக உள்ளது. வாரசந்தையின்போது மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிவதால் பெரும் கஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, சந்தையில் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். வாரச்சந்தையை மார்க்கெட்டிங் கமிட்டி கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Related Stories: