புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி புதுவையில் கூடுதல் அபராதம் வசூல்

புதுச்சேரி, நவ. 13: மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை புதுவையில் அமல்படுத்தி கூடுதல் அபராத தொகையை வசூலிக்கும் பணியை உயர் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம் ஒவ்வொரு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சில மாநிலங்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அங்கு அமலில் இல்லை. இந்த புதிய சட்டத்தின்படி லைசென்ஸ் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த மோட்டார் வாகன சட்டத் திருத்தம் புதுவையில் உடனடியாக அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதுவரையிலும் பழைய அபராத தொகையையே போலீசார் வசூலித்து வந்தனர்.

 இந்த நிலையில், இந்த புதிய சட்டம் நவம்பர் முதல் வாரத்தில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்டத்தின்படி குற்றங்களுக்கு ஏற்றவாறு அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இதுவரையிலும் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.30 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக குடிபோதையில் வண்டி ஓட்டிய நபரிடமிருந்து ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 இதேபோல் காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களிலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் வசூலிக்க போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிறிய மாநிலமான புதுச்சேரியில் 15 ஐஏஎஸ், 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியில் உள்ள நிலையில், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதிலும், மக்கள் நலத்திட்டங்களை தடுத்து இடையூறுகளை ஏற்படுத்தி மாநில அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவதிலும் உயர் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவதாக ஆளுங்கட்சி குற்றச்சாட்டை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: