இரும்பு கடையின் மேற்கூரையை பிரித்து பணம் கொள்ளையடித்த வாலிபர் கைது

முஷ்ணம், நவ. 13: முஷ்ணம் அருகே ஆண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மதுரை (32). இவர் கோவிந்தநல்லூர் பகுதியில் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல் உணவுக்காக கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்திருந்த 3 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தர்மதுரை சோழத்தரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, இளையராஜா மற்றும் போலீசார் கொள்ளை நடந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் சிவா (எ) ஜோ.ஆண்டனி (19) என்பவர் இந்த கொள்ளையை நடத்தியது தெரியவந்தது. இவர் சோழத்தரத்தில் மீன்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ள சிவா கஞ்சாவுக்கு அடிமையாகி இருந்துள்ளார். கஞ்சா வாங்க பணம் இல்லாததால் பழைய இரும்புக்கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி ரூ.3 ஆயிரத்தை திருடியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து சிவாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காட்டுமன்னார்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>