கடலூர் அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு

கடலூர், நவ. 13:  கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். கெடிலம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கடலூர் அரசு பொது மருத்துவமனை போதிய சுகாதாரமின்மை மற்றும் தூய்மை இன்மை காரணத்தால் புதர்மண்டி கிடைக்கிறது. இதுபோன்று சாக்கடை நீர் வழிந்தோடுகிறது. இதனால் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் நோயாளிகளின் தரப்பினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டு பகுதிக்கு அருகில் நல்ல பாம்பு ஒன்று சென்றது. இதைப் பார்த்த நோயாளிகள் பதறி ஓடினர். மேலும் அவரது உறவினர்களும் சிதறி ஓடினர்.

பாம்பை பிடிப்பதற்கு முயற்சித்தும் அதற்குள் புதர் மண்டிய செடிகளுக்குள் சென்று மறைந்ததால் உடனடியாக பாம்பு பிடிக்கும் ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் ஆர்வலர் செல்லா நீண்ட  நேரத்துக்குப்பின் புதரில் மறைந்திருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தார். விஷத்தன்மை அதிக அளவில் உடைய நல்ல பாம்பு அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையை உடனடியாக தூய்மை செய்து புதர்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

Related Stories:

>