காடையாம்பட்டி அருகே சிறுமியை கடத்தி திருமணம் போக்சோவில் வாலிபர் கைது

காடையாம்பட்டி, நவ.13: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி ஊராட்சி தொன்னப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த 40வயது பெண்ணுக்கு 3 மகள்கள் மற்றும் 15வயதில் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகளை மூக்கனூர் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். 19 வயது கொண்ட 2வது மகளை கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது 65 வயது தந்தைக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது, இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. விதவை பெண்ணின் 3வது மகளான 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த தேமநாய்க்கர் என்பவரின் மகன் கோவிந்தராஜ்(27) என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், திடீரென 2 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்தனர். இதில், மைனர் பெண்ணை கரூர் மாவட்டத்திற்கு கடத்திச்சென்று கோவிந்தராஜ் திருமணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நவீன காலத்திலும், எங்கள் சமூகத்தில் மூட நம்பிக்கையின் காரணமாக 70 வயது முதியவர் ஒருவர் முறை பெண் என்ற காரணத்தால் 13 வயது குழந்தையை 5வது திருமணம் செய்வது,  தனது மகள் வழி பேத்தியை 3வது முறை திருமணம் செய்வது,  சொத்துக்கு வாரிசு வேண்டும் என கூறி 80 வயது முதியவருக்கு 15 வயது பேத்தியை திருமணம் செய்து வைப்பது தொடர்கதையாக உள்ளது. கேட்டால் எங்கள் சமூக வழக்கம் என காரணம் கூறுகின்றார்.  இந்தியாவில் அனைவருக்கும் ஒரே சட்டம் தான். அப்படி இருக்கும்போது குழந்தை திருமணம் தொடர்வது வேதனையளிப்பதாக உள்ளது. போக்சோவில் கைது செய்யப்பட்ட வாலிபர் திருமணம் செய்து கொண்ட சிறுமியின் அக்காவான 19வயது பெண்ணை 65 வயதான அவரது தாத்தாவுக்கு 3வதாக திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது, அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதேபோல், இப்பகுதியில் 50, 60, 70 வயது கொண்ட முதியவர்கள் 50க்கும் மேற்பட்டோர் 13, 14 மற்றும் 15 வயது கொண்ட சிறுமிகளை 3வது, 4வது, 5வது திருமணம் செய்துள்ளனர். இந்த அவலநிலையை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரசு இயந்திரமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>