×

கொல்லிமலை அடிவாரத்தில் புதிய நீர்வீழ்ச்சி: சுற்றுலாதளமாக மாற்ற மக்கள் கோரிக்கை

சேந்தமங்கலம், நவ.13: சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் நீர்வீழ்ச்சியை மேம்படுத்தி சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பழனியப்பர் கோயில் உள்ளது. கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள இக்கோயிலுக்கு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் கோயிலின் எதிரில் உள்ள வனத்தில் நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது. கொல்லிமலை ஐந்து நாடு பகுதிகளிலிருந்து வரும் தண்ணீர் வனப்பகுதிகளில் வந்து இங்கு 5 அடி உயரத்தில் அருவியாக கொட்டி, இங்கிருந்து மேலப்பட்டி ஏரிக்கு செல்கிறது. தற்போது இந்த நீர்வீழ்ச்சியில் உள்ளூர் மக்கள் மட்டும் குளித்து வருகின்றனர்.

இப்பகுதியை மேம்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பழனியப்பர் கோயில் அருகிலுள்ள நீர்வீழ்ச்சியை மேம்படுத்தி, உடை மாற்றும் அறை, பாதுகாப்பு தடுப்பு கம்பிகள், சாலை வசதி உள்ளிட்டவைகளை மேம்படுத்த வனத்துறையினர் எடுத்தால் இப்பகுதி சிறந்த சுற்றுலா தளமாக மாறும். கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் தற்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் முழுமையாக மேலப்பட்டி ஏரிக்கு செல்வதில்லை. நீர்வழி ஓடை பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளதால் வழியிலேயே தண்ணீர் தடுத்து நிறுத்தப்படுகிறது. மேலும், இப்பகுதியில் மதுபிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

Tags : New Falls ,Kolli Hills: People ,
× RELATED கொல்லிமலை அடிவாரத்தில் புதிய...