×

அரூர் அருகே குமாரம்பட்டியில் காலி குடங்களுடன் சாலை மறியல்

அரூர், நவ.13: அரூர் அருகே குமாரம்பட்டியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க கோரி காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே குமாரம்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இக்குடிநீரானது, அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இவ்வாறு விநியோகம் செய்யப்படும் குடிநீர், அப்பகுதி பொதுமக்களுக்கு முறையாக செல்வதில்லை எனவும், குடிநீர் போதுமானதாக இல்லை எனவும் புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து, பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவையை போக்க மேலும் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குமாரம்பட்டி பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க அப்பகுதியில் ₹2.50 லட்சம் மதிப்பில் புதிதாக ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தனர். இத்தொட்டி அமைத்து சில மாதங்கள் ஆகியும் நேற்று வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து, நேற்று அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் அரூர்- ஊத்தங்கரை சாலையில், குமாரம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அரூர் போலீசார் மற்றும் பிடிஓ கோபிநாத் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இன்னும் 2 நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அனைத்து பகுதிகளிலும் முறையான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Kumarampatti ,road ,Aroor ,
× RELATED 43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை