போலீசாரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்

வாடிப்பட்டி, நவ. 13: சோழவந்தான் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து வாடிப்பட்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து, நீதிமன்றம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது வாடிப்பட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிபவர் அரிச்சந்திரன். இவர் மீதும், இவரது குடும்பத்தார் மீது சோழவந்தான் போலிசார் பொய் புகாரின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அவ்வழக்கினை வாபஸ் பெறக்கோரியும், சம்பந்தப்பட்ட ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் வாடிப்பட்டி நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று திடீரென நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக மதுரை-திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பதற்றமும் ஏற்படவே சமயநல்லூர் டி.எஸ்.பி ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் வழக்கறிஞர்களிடையே கோரிக்கை குறித்து முறையான நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். அதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்ற வழக்கறிஞர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். வழக்கறிஞர்களின் இந்த திடீர் போராட்டத்தினால் மதுரை திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பும், நீதிமன்ற வளாகத்தில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

Related Stories: